551.சென்னையில் தொலைந்து போனவர்கள்!
அன்று காலையில் "டியாப்பம் டியாப்பம்" என்று கூவிக்கொண்டு சைக்கிளில் சென்றவரைப் பார்க்கையில், சில மலரும் நினைவுகள் தோன்றின. நமது இந்த அவசர, "வளர்ச்சி" அடைந்த வாழ்க்கையின் காரணமாக, எத்தனை மனிதர்கள் தொலைந்து போய் விட்டார்கள், இந்த மாநகரத்திலிருந்து! கிராமங்களில் அவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்!
என் பள்ளி நாட்களில், திருவல்லிக்கேணியின் தெருக்களில் பலவகையான மனிதர்கள் உலா வந்தார்கள்! "உப்புத் தாத்தா"வை மறக்கவே முடியாது. ஒரு பெரிய சாக்குப்பை நிறைய கல் உப்பை கைவண்டியில் இட்டு, வாரம் ஒரு முறை எங்கள் தெருவில் "உப்பேய், உப்பேய்" என்று கூவிக்கூவி விற்பார். எல்லாரும் வாங்குவார்கள். ஒரு படி நாலணா என்று ஞாபகம். அப்போதெல்லாம் யாரும் "ஐயோடைஸ்ட் சால்ட்" உபயோகித்தது இல்லை!!
அது போலவே, திருவள்ளுர்/செங்கல்பட்டு அருகே இருந்த கிராமங்களிலிருந்து பருப்பு, புளி, குண்டு மிளகாய் போன்ற சாமான்களை எடுத்து வந்து சென்னையில் ரெகுலராக விற்று வந்தனர். பளபளவென்ற மூங்கில் கூடைகளில் கலப்படமில்லா சரக்கை, நியாயமான விலைக்கு விற்றனர். அரிசிக்காரர்கள் பெரும்பாலும் தெலுங்கர்களே.
ஆந்திரத்தில்(முக்கியமாய் நெல்லூர்) விளைந்த அரிசியை வீட்டுக்கே எடுத்து வந்து அளந்து போடுவர். படிக்கணக்கு தான், கிலோவெல்லாம் கிடையாது. படி 5-6 ரூபாய் தான்.
அரிசிக்காரருடன் ஒரு கூலியாள் மூட்டை அரிசியை முதுகில் தூக்கி வந்து, அத்தனை அரிசியையும் ரேழியில் கொட்டிவிட்டு, அளந்து போடும் அந்தக் காட்சி அலாதியான சுவாரசியம்! அரிசிக்காரர் படி எண்ணிக்கையை சத்தமாக தெலுங்கில் அறிவிக்க, கூலியாள் அரிசியை படியில் இட்டு எங்கள் அரிசி டின்னில் கொட்டுவார். அவர் நிலைமை தான் பரிதாபம், என் பாட்டி (அரிசியை படியில்) 'கூம்பாகப் போடு' என்பார், அரிசிக்காரரோ தெலுங்கில் "தட்டிப்போடு" என்று கட்டளையிடுவார் :)
காஞ்சிபுர வியாபாரி ஒருவர் பளபளக்கும் வெண்ணையை தகர டின்னிலும், நெய்யை ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும் வீட்டுக்கே எடுத்து வந்து விற்பனை செய்வார். பணத்தையும் தவணை முறையில் வாங்கிக் கொள்வார். போனஸாக சின்னப் பசங்க எங்களுக்கு கொஞ்சம் வெண்ணெய் கொடுத்து விட்டுத் தான் புறப்படுவார்! அதை சர்க்கரையைத் தொட்டுத் தின்போம்.
அழகான மண்பானையில் தயிர் எடுத்து வந்து விற்ற ஆயாவையும் மறக்க முடியாது. அது போல ருசியான, சற்று புளிப்பான தயிர் இன்று வரை கிடைக்கவில்லை!
"கோல மாவேய் கோல மாவேய்" என்று கோலம் போடும் மாவை வீதியில் விற்ற காலமும் மலையேறி விட்டது, இங்கொன்று அங்கொன்று என்று சிலர் விற்றாலும் கூட! அதற்கு மொக்குமாவு என்ற பெயரும் உண்டு.
இப்போது, அவரவர் தங்கள் ஃபிளாட் வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை நிரந்தரமாக ஒட்டி விட்டு, அதை தினமும் துடைத்து விடுகிறார்கள் :) சிலர், மொத்தையாக உள்ள ஒரு சாக்குக்கட்டியால் தாரேபூரே என்று ஒரு கோலம் போடுகிறார்கள்! என்ன கொடுமை பாருங்கள்! இதனால் தான், கோலம் போடும் போட்டியெல்லாம் வைத்து, அந்த பாரம்பரியக் கலையை இப்போது காப்பாற்ற வேண்டியுள்ளது :)
பால்காரர் வீட்டுக்கு வந்து பால் தருவதும் அரிதாகி விட்டது. எருமைப்பால், பசும்பால் எல்லாம் போய், ஆவின் பால், ஆரோக்கியா பால் வந்து பலகாலமாகி விட்டது! மிச்சம் மீதியுள்ள பால்காரர்கள் பாலை ஹோட்டலுக்கு விற்று வருகின்றனர்! தெருவில் அலையும் மாடுகள் ஆவின் பிளாஸ்டிக் கவர்களை சாப்பிடுகின்றன :)
ஊதுவத்தி, கற்பூரம் மற்றும் சின்னச்சின்ன அழகுச்சாதனங்களை விற்க வரும் பெண்களை, காவல்காரர் அடுக்குமாடி குடியிருப்புக்குள் போகவே விட மாட்டார்.
சூப்பர் மார்க்கெட் கலாச்சாரமும், அவசர, துட்டுக்கு அலையும் அவல வாழ்க்கையும் அவர்களையெல்லாம் துரத்தி விட்டது. மனிதரை மனிதர் நம்ப முடியாத ஒரு சூழலால், யாரையும் வீட்டுக்கு உள்ளே அனுமதிக்க பயமாயிருப்பதுவும் ஒரு காரணம் தான்.
நமது "use & throw" என்ற அமெரிக்கரிடமிருந்து கற்றுக் கொண்ட பழக்கத்தால், காணாமல் போனவர் சிலருண்டு.பழைய பாட்டில்களையும், இரும்புச் சமாச்சாரங்களையும், பாலிதின் பால் கவர்களையும் விலைக்குப் போட்டுக் கொண்டிருந்த காலம் போய், அவையெல்லாம் இப்போது நேராக குப்பைத்தொட்டிக்கு போய் விடுகின்றனர். இது சுற்றுப்புற சுகாதார சீரழிவுக்கு வழிவகுக்கிறது. முன்பெல்லாம், பழைய துணிகளை சேர்த்து வைத்து பாத்திரக்காரரிடம் போட்டு பாத்திரம்/பிளாஸ்டிக் சாமாங்கள் வாங்குவார்கள்.
பழைய துணிகள் + பணம் என்று cash & kind முறையில் நடந்த வியாபாரம் அது. பாத்திரக்காரர், பல குடித்தனங்கள் உள்ள ஒரு வீட்டில் 2-3 மணி நேரம் உட்கார்ந்து டீலை முடிப்பார்! அடுக்குமாடி குடியிருப்பு நிறைந்த கான்கிரீட் காடாகி விட்ட ஊரில் அவர் கண்ணில் தட்டுப்படுவதே அபூர்வமாகி விட்டது.
அது போலவே, "பிளாஸ்டிக் பக்கிட்டு ரிப்பேய்ர்" என்று கூவியபடி வந்து, ஊதி ஊதி கரியைப் பற்றவைத்து, வாய்/காது அறுந்த பிளாஸ்டிக் பக்கெட்டுகளை அழகாக ஒட்டித் தருபவர்களும் காணாமல் போய் விட்டார்கள்.
கத்தி, கத்திரி, அருவாள்மனை, கூர் தேய்ந்து விட்டால், கூலாக நாம் அவற்றைத் தூக்கிப்போட்டு விட்டு, புதிது வாங்கி விடுகிறோம். அதனால், காலால் மிதித்து சக்கரம் சுழற்றி சாணக்கல்லில் அவற்றைக் கூர் தீட்டித்தரும் சாணக்காரர்களும் வழக்கொழிந்து வருகிறார்கள்.
அந்தக்காலத்தில், அவர்கள் "சாணா பிடிக்கறதே சாணா" என்று கூவிக் கொண்டு வந்தவுடன் வீதிக்கு ஓடிச் செல்வோம். தீப்பொறி பறக்க சாணம் தீட்டுவதை சிறுவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது வாடிக்கை. ஒரு கால் பெடலை மிதிக்க, இரண்டு கைகளாலும் கத்தியை வாகாக பிடித்து, வேகமாக சுழலும் சாணக்கல்லில் அதை லாவகமாக கூர் தீட்ட வேண்டும்!
இவர்களில் தப்பியவர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளிகளும், ரோட்டில் குப்பை பொறுக்குபவர்களும் தான்! ஏனோ செருப்பைத் தைத்து உபயோகிக்கும் வழக்கம் இன்னும் நம்மிடம் இருப்பதால், முன்னவர் சிலர் தெரு ஓரங்களில் இன்னும் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.
பின்னவர் நம்மை நம்பி இல்லை; சாலையில் இருக்கும் குப்பைத் தொட்டிகளையும், அவர் துரத்திச் செல்லும் குப்பை வண்டிகளையும் நம்பி இருப்பதால், அவர்களின் வண்டியும் நகரத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது!
சரி, இப்படித் தொலைந்து போனவர் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டு விட்டதா, அவர்கள் பிள்ளைகள் வேறு நல்ல வேலைக்குச் சென்று முன்னுக்கு வந்து விட்டார்களா என்றால், அதுவும் நல்ல அளவில் நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை! Inequality is so rampant. இந்த இடுகையின் முடிவில் சுட்டப்பட்டிருக்கும் "உருப்படாதது" நாராயணனின் கட்டுரையை நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்!
நாம் காணும் பொருளாதார வளர்ச்சி என்பது அடித்தட்டு மக்களை சென்றடையவே இல்லை என்பது நிதர்சனம். ஏழைகளை ஏழைகளாக வைத்து அரசியல் நடத்தி, இந்திய ஜனநாயகம் தழைத்து வளர்ந்திருக்கிறது, கூடவே நக்ஸலிசமும் தான் !!!!
எ.அ.பாலா
picture courtesy:
1. Velachery Balu
2. DFID - UK Department for International Development
http://www.flickr.com/photos/balu/3303479445/
http://www.flickr.com/photos/dfid/3316075589/
36 மறுமொழிகள்:
Test comment !
காலத்தின் கோலம்:(
அம்மி கொத்துபவர்கள், பாத்திரங்களுக்கு ஈயம் பூசுபவர்கள், கொம்பில் மிட்டாய் சுற்றி விற்பவர்கள், (மிட்டாயை மீசையாய் ஒட்டி விடுவார்கள்) குடுகுடுப்பைக் காரர்கள்.. என பலபேர் இந்த லிஸ்டில் உண்டு. வணிகமயமாதலின் விளைவு விளிம்பு நிலை மக்களை சுழற்றியடிக்கிறது. :-(
தொலைந்துப்போனவங்க எல்லாரையும் லிஸ்ட் அவுட் செஞ்சுட்டீங்க விட்டுபோனவர்களில் எனக்கு தெரிந்தவரையில் சினிமா இண்டர்வெல் டைம்ல தட்டுல முறுக்கு பாப்கார்ன் எடுத்துவரும் இளம் சிறார்கள் அல்லது வயது முதிர்ந்தவர்கள் !
சுமார் 20 ஆண்டுகள் என்னை பின்னோக்கி அழைத்து சென்ற உங்கள் பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.என்னை பொறுத்தவரை, திறந்த பொருளாதார கொள்கையால் நிறைய குடும்பங்கள் நன்மை அடைந்ததாகவே கருதுகிறேன்.
ரவி சுகா @RaviSuga
Test comment ! 1..2.3..ஹலோவ் கமெண்ட் டெஸ்டிங் :)
ஹிஹிஹி..நானும் கமெண்ட் ஒர்க்காவுதான்னு பார்த்தேன் சீனியர் ;)
ஜோக்ஸ் அபார்ட்..
சோன்பப்டிகாரர், குச்சி ஐஸ்காரர்..ஹும்..என் மகளுக்கு இந்த மனிதர்களையெல்லாம் பார்க்க கொடுத்து வைக்கவில்லை..
நீங்கள் சொல்வது போல அவர்கள் மட்டுமல்ல, நாமும் இந்த காங்கீர்ட் காட்டில் தொலைந்து போய்விட்டோம்..தவறு நம் மீதும்தான்..
என் முதல் வகுப்பு பாஸ்கார்டுலிருந்து இருந்து காலேஜ் அட்மிஷன் கார்டு வரை பட்டுவாடா பண்ண எங்க ஏரியா போஸ்ட்மேன் மாமாவை நான் பார்த்து பல வருடங்கள் ஆயிற்று..
ஒரு ஒரு தடவையும் என் பெயர் சொல்லி கடிதம் கொடுத்து என் கையால் ஒரு சொம்பு தண்ணீர் வாங்கி குடித்து சென்ற அவரை போஸ்ட்மேன் மாமாவன்னுதான் தெரியுமே தவிர அவர் பெயர் தெரியாது..நன்றி மறந்தவன் நான் :(
அவர் தொலைந்து போனதில் எனக்கும் பங்கு உண்டு...
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
எஅ.பாலா,
அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று நினைக்கிறீர்கள்?
தன்னளவில் ஒரு தொழிலாக,வர்த்தகராக இருந்த அவர்கள் எல்லாம் இப்போது எங்கே?
பிழைப்புக்கு என்ன செய்கிறார்கள்?
இரண்டே வாய்ப்புகள் தான்.ஒன்று விவசாயியாக இருக்க வேண்டும்.அல்லது ஏதேனும் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும்.
நாடு அளவில் வேலை வாய்ப்புகள் நிறைய எண்ணிக்கையில் உருவாகி இருக்கும் போது இரண்டாவது வாய்ப்பு சாத்தியம்.
முதல் வாய்ப்பு தத்துவ ரீதியாகவும் வாய்ப்பில்லை.
இந்தியா மேலைநாடுகளைப் போல அதிக அளவு மக்கள் தொகையினர் வேலையை நம்பி இருக்கும் நாடாக மாறிக் கொண்டிருக்கிறது.
இதன் நீட்சி நாட்டளவிளான பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது அது சிறு அளவில் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும்.
சிறு வர்த்தகர்களாக பெரும்பாலானவர்கள் இருக்கும் நாட்டிற்கும் பெரும்பாலானவர்கள் வேலையாளர்களாக இருக்கும் நாட்டிற்கும் பொருளாதார தாங்குநிலை-sustainability-ல் பெரும் வேறுபாடு உண்டு.
நன்றி, சுரேஷ்,
//கொம்பில் மிட்டாய் சுற்றி விற்பவர்கள்//
எழுதத் தொடங்கும்போது நினைவில் இருந்து, பின்னர் ஏனோ மறந்து விட்டேன்.
அது போலவே, பாயிலர் ரிப்பேர் என்று ஒருவர் வீட்டுக்கு வருவார்.
பாத்திரங்களில் பெயர் போட்டுத் தருபவர், செதுக்கிச் செதுக்கி எத்தனை அழகாக பேர் போடுவார் தெரியுமா !
ஆயில்யன்,
சென்னையிலேயே, ஜெயந்தி, தியாகராஜா (திருவான்மியூர்) தியேட்டர்களில், ஸ்நாக்ஸ் விற்பார்கள், இன்டெர்வல்லில் !
வரவுக்கு நன்றி.
ரவிசுகா,
பாராட்டுக்கு நன்றி.
நன்மையே இல்லை என்று சொல்லவில்லை.
அதன் பலன் ஏழைகளுக்கு 20% கூட கிடைக்கவில்லை என்பது யதார்த்தம். அதற்கு 1000 காரணங்கள் இருக்கலாம் ! முக்கியமாக, எல்லாவற்றிலும் ஊழல் :(
சுவாசிகா,
அழகான கருத்து !
நாமும் ஒரு காரணம் தான். ஓட்டம் ஓட்டம் என்று எதற்காக ஓடுகிறோம் என்று தெரியாமல் ஒரு ஓட்டம் !!
அறிவன்,
வருகைக்கு, சிந்திக்க வைத்த ஒரு கருத்துக்கும் நன்றி.
சிறு வர்த்தகர்கள் பேணப்பட வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
கலக்கலான பதிவு...
நினைவுகள் மலர்கின்றன...
வீட்டில் கிணறு இருந்தால் அதில் ஊற்ற ஒரு வெள்ளை நிற மருந்து ஒருவர் கொண்டு வருவார். அவரையும் காணோம்... கிணற்றையும் தான்.;)
- சுவாமிநாதன்
வணக்கம் எ.எ.பாலா,
நீண்ட நாட்களுக்கு பிறகு வலையுலகம் எட்டிப்பார்த்தேன் என்ன ஆச்சர்யம் சென்னையில் தொலைந்து போனவர்கள் என்று ஒரு பதிவு!! நானும் அதில் ஒருவன் ஆகியாச்சு தான்.
என்னுடன் இந்தப்பட்டியலிலில் இவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்,சக்கரம் வைத்து தள்ளு வண்டி போன்ற தையல் எந்திரத்தை தள்ளி வந்து கிழிசல்களை தைத்துக்கொடுப்பவர்களையும்,வீட்டிற்கே வந்து வாடகைக்கு படிக்க நூல்களை தரும் நடமாடும் லெண்டிங் லைப்ரரி ஆசாமிகளையும் தற்போதெல்லாம் காண முடிவதில்லை. இது குறித்து வருத்தம் கொள்வதை விட இவர்கள் எல்லாம் காணாமல் போனது ஒரு பரிணாம வளர்ச்சி என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர்கள் தொழிலில் வளர்ந்து முன்னேறி இருக்கலாம் அல்லது வாரிசுகள் படித்து மென்பொருள் வித்தகர்களாகவோ, மருத்துவர்களாகவோ மாறி இருக்கக்கூடும். இன்றும் அதே தொழில் செய்பவர்கள் காண முடியாதது வளர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும், நாம் மட்டும் வளர்ந்து காரில் செல்ல நாம் பார்த்து ரசிக்க அவர்கள் மட்டும் அதே தொழிலில் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் நியாயம் சுவாமி!
'Those were the days , my friend.'
Were they the only ones who disappeared - our lives of leisure and contentment have gone too...
சுவாமிநாதன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வவ்வால்,
நிஜமா சொல்றேன், ஒரு வாரம் முன்பு ஒரு பழைய இடுகையில் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தபோது, "என்னடா இவரை இப்போது காணலியே?" என்ற எண்ணம் ஏற்பட்டது
உங்கள் மீள்வருகையில் மிக்க மகிழ்ச்சி (வாய் வார்த்தையாக இதைக் கூறவில்லை) :) விவாத மன்னராயிற்றே நீங்கள் ;)
//அவர்கள் தொழிலில் வளர்ந்து முன்னேறி இருக்கலாம் அல்லது வாரிசுகள் படித்து மென்பொருள் வித்தகர்களாகவோ, மருத்துவர்களாகவோ மாறி இருக்கக்கூடும். இன்றும் அதே தொழில் செய்பவர்கள் காண முடியாதது வளர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும், நாம் மட்டும் வளர்ந்து காரில் செல்ல நாம் பார்த்து ரசிக்க அவர்கள் மட்டும் அதே தொழிலில் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் நியாயம் சுவாமி!
//
அப்படி மாறியிருந்தால் சந்தோஷம் தான். அப்படி ஆன மாதிரி தெரியவில்லை என்ற ஆதங்கம் தான், இடுகையின் முடிவில் சொல்லியிருக்கிறேனே !
மாற்றம் ஒன்றே நிரந்தரமானது என்பது உண்மை தான். அந்த மாற்றத்தில் நல்லது நிகழ வேண்டும் என்பது மினிமம் எதிர்பார்ப்பு.
மற்றபடி, நான் காரில் போய்க் கொண்டு, நான் ரசிக்க அவர்கள் அதே தொழில் செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு அக்கிரமக்காரனாக என்னை சித்தரிக்காதீர்கள் :-)
இடுகையின் நோக்கம் நாஸ்டால்ஜியா + நியாயமான ஆதங்கம் மட்டுமே !!
அன்புடன்
பாலா
செந்தழல் நண்பரே,
நன்றி :)
ராஜி மேடம்,
நீங்கள் சொல்வது மிகச் சரி !
Contentment is absent and people are generally restless because of too much materialism.
சென்னை என்பதை விட எல்லா ஊர்களுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டிய கட்டுரை, நம் நாடு உட்பட.
கட்டுரை சிறப்பாகக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
நன்றி, கானாபிரபா :)
உங்க லொகாலிடி ரொம்ப pOSH ஆ அயிடுச்சோ என்னமோ:) இன்னும் எங்க வீட்டுக்கு வெண்ணைக்காரம்மா, கோலமாவு , சாணை பிடிக்கலையோ, தள்ளுவண்டி தையல்,பே..ப்பார்..பழைய பே..ப்பார் ,பழக்கூடைக்காரம்மா,கறிகாய்க்காரம்மா, தள்ளுவண்டிக் கறிகாய், மஞ்சள் வித்துக்கிடே ஜோசியம் சொல்லும் ஆந்திர மஞ்சள்காரர் இன்ன பிற எல்லாரும் வந்துக்கிட்டுதான் இருக்காங்க
அது சரி..வீட்டுல அப்பா அம்மா ரெண்டும் ஆபிஸ் போயிட்டு ஆறு மணிக்கு மேல வர்ராங்க..குழந்தைகளும் ஸ்கூல்,ட்யூஷன்.,டான்ஸ் பாட்டு அல்லது க்ரச் எல்லாம் போயிட்டு கிட்டத்தட்ட ராத்திரிதான் வீட்டுக்கு வற்றாங்க..அப்படி இருக்கும் போது தெருவோட வந்து வியாபாரம் பண்ணுறவங்க யாருகிட்ட வியாபாரம் பண்ணுவாங்க..இல்லை வர்ராங்களா இல்லையான்னு பாக்க யாரும் வீட்டுல இருக்கிறதில்லை :)யாரும் தொலையலை..பார்க்க நேரமில்லாம நாமதான் நேரத்தைத் தொலைச்சுட்டு நிக்குறோம் :)
கலக்கலான பதிவு...
அருமையான பதிவு ஸார்.. ரொம்ப எதார்த்தமா எல்லாத்தையும் ஞாபகப் படுத்திட்டீங்க.. பூக்காரர், இரவில் குல்பி விற்பவர்,கீரை, கருவாடு, தவணை முறையில் சேலை விற்பவர், ட்ரைசைக்கிளில் படம் காட்டுபவர், தண்டல்/சீட்டு பிடிப்பவர் இப்படி பலரும் சேர்ந்தே தான் தொலைந்து போயிருக்கிறார்கள்..
-Toto
www.pixmonk.com
rappitchaikarargal ippothu varuvathillai. Velaikkarargal pazhaya soru vangipovathillai!Sappadu vendam enru solgirargal.Poruladhara munnetram?
<<<
நாம் காணும் பொருளாதார வளர்ச்சி என்பது அடித்தட்டு மக்களை சென்றடையவே இல்லை என்பது நிதர்சனம். ஏழைகளை ஏழைகளாக வைத்து அரசியல் நடத்தி, இந்திய ஜனநாயகம் தழைத்து வளர்ந்திருக்கிறது, கூடவே நக்ஸலிசமும் தான் !!!!
>>>
உண்மைதான்... பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் மேலும் உயர்ந்து செல்கிறார்கள்... ஏழைகள் என்றும் அப்படியே இருக்கின்றனர்.
நானும் சென்னையில் இருந்து தொலைந்து விடுவோனே என்று பயமாக இருக்கிறது. :(
நல்ல பதிவு பாலா
Hello Balaji,
I am reading the blogs after a while now. It is simply great. I will recommend the blogs to all my family and friends
Murugappan
Hello Balaji,
I am reading your blogs after a while. They are very interesting. Please continue to blog. I am planning to share your blogs with my family. I think the GCT blogs will be something very special to read along with our children.
thanks
Murugappan
மீள் பின்னூட்டம். மீள் நல்ல பதிவு. ஒரு ஓட்டையும் சேர்த்தேன்.
சங்கர், ஐகாரஸ், Toto, Anonymous, Mastan, Murugappan,
வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
"செந்தழல்" நண்பரே,
மீள் நன்றி :)
In the 1940s, I remember reading an editorial caption in Ananda Vikatan against the then Brittish government of the Presidency regarding the increase of price of rationed rice. It went like this: "ரூபாயிக்கு இரண்டரைப்படியா"
அவ்வப்போது தண்ணி கலந்து எஸ் ஆகும் மண்ணென்ணெய் வண்டிக்காரர், ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய், ஒரு மாடி உயர மூங்கில் குழாயின் மேலிருந்து கீழ்வரை சுற்றி சுற்றியிருப்பதை எடுத்து, கையில் கட்டி விட்ட வாட்ச் மிட்டாய்காரர், சீனிக் கெழங்கேய் தாத்தாக்கள், பிளாட்பாரத்தில் ”கொருக்கலிக்கா” விற்ற ஆயாக்கள், சுடச்சுட வடை சுட்ட பாட்டிகள் என்று எனது பால்யகால நினைவில் இருந்தவர்கள் இன்று யாருமே இல்லை.
Hi Mr. Bala
I too lived in Triplicane in my elementary school days. I remember the person who sold curd in pots used to shout 'OOO'. At night, a 'palgova' like ice cream was sold in 'thallu vandi'. In another blog, you wrote about Bharat Building (now owned by LIC), which was opposite to Wellington Theater. I was sorry that Bharat Building would be demolished, and thank God, better sense prevailed and it would now be renovated.
Post a Comment